ஜெய்பூர்,
பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை அடித்துக்கொலை செய்யும் வன்முறை சம்பவங்கள் வடமாநிலங்களில் அதிகரித்து காணப்படுகிறது. ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் பசுக்களை ஓட்டிச்சென்று கொண்டிருந்த அக்பர் கான் என்பவர் பசு பாதுகாவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தில் மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கிடையே உயிரிழந்த அக்பர் கானின் குடும்பத்தாருக்கு ரூ. 1.25 லட்சம் உதவியாக கொடுக்க உத்தரவிடப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் மாநில பா.ஜனதா அரசின் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, இதுபோன்ற தாக்குதல்கள் உலகம் முழுவதும் நடக்கிறது. ராஜஸ்தானில் மட்டும் நடக்கவில்லை. நான் எதுவும் பேசவில்லை, செய்யவில்லை என்று சொல்ல முயற்சி செய்வார்கள்... இது மிகவும் கடினமானது, சம்பவம் ராஜஸ்தானில் எங்கேயோ உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நள்ளிரவு 12 மணியளவில் நடந்துள்ளது. அங்கு உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள நான் கடவுளாகதான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற கும்பல் தாக்குதல்களுக்கு வேலையின்மையை குற்றம் சாட்டும் வசுந்தரா ராஜே சிந்தியா, உதவியின்றி மக்களுடைய கோபம் அதிகரிக்கிறது என கூறியுள்ளார்.