அகமதாபாத்,
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தில் உள்ளது. கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி நேரில் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 4ஆவது டெஸ்ட் போட்டியின்போது பிரதமர் மோடி அகமதாபாத்திற்கு வருகை தந்திருந்தார். அவர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அந்த வகையில், 19-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி வரலாம் என்றும், அவர் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.