புதுடெல்லி
அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ இந்தியாவுக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, கொல்கத்தாவுக்கு வருகை தந்த அவர் அன்னை தெரசா நிறுவிய கருணை பணியாளர் அமைப்பின் தலைமையகத்திற்கு சென்று பார்வையிட்டார். இதன்பின்னர், கொல்கத்தாவின் புகழ்பெற்ற விக்டோரியா நினைவகத்திற்கும் சென்றார்.
டெல்லியில் பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் டெல்லியில் ரூபியோ, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், டெல்லி ரொம்ப சூடாக உள்ளது. அது குளிர்ச்சியடைய வேண்டும் என குறிப்பிட்டார். பின்னர், உங்களை இந்த சூடான இடத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்க விரும்பவில்லை என்று கூறி கூட்டத்தில் உரையை விரைவாக முடித்து கொண்டார்.
அவர் கூட்டத்தில் பேசும்போது, வளர்ந்து வரும் அமெரிக்கா மற்றும் இந்திய உறவுகள் பற்றி குறிப்பிட்டார். அமெரிக்காவில் 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இந்திய செய்துள்ள முதலீடு உள்பட வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளின் நட்புறவானது வலுப்பட்டு உள்ளது என்று கூறினார்.