லக்னோ,
உத்தரபிரதேசத்தில் குடியரசு தினவிழாவையொட்டி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பை சேர்ந்தவர்கள் காஸ்காஞ்சில் மற்றொரு பிரிவினர் வாழும் பகுதியின் வழியாக மூவர்ணக்கொடியுடன் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். அப்போது இருதரப்பினர் இடையே மோதல் நேரிட்டது. மோதலின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் சந்தான் குப்தா (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. சந்தான் குப்தாவிற்கு இறுதிசடங்கு நடந்தபோதும் வன்முறை வெடித்தது. இதனையடுத்து உத்தரபிரதேச போலீஸ் கைது நடவடிக்கையில் இறங்கியது, 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து உள்ளது.
பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வன்முறையில் தொடர்பு இல்லாதவர்களையும் போலீஸ் கைது செய்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இஸ்லாமியர்கள் பகுதிக்கு செல்வது டிரண்ட் ஆகிவிட்டது என மாவட்ட மாஜிஸ்திரேட் விமர்சனம் செய்து உள்ளார். பரேலி மாவட்ட மாஜிஸ்திரேட் விக்ரம் சிங் காஸ்காஞ்ச் மோதல் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் வேண்டுமென்ற பேரணியாக செல்வதும், அங்கு பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை எழுப்புவதும் டிரண்ட் ஆகிவிட்டது. இது எதற்கு? அவர்கள் என்ன பாகிஸ்தானியர்களா?, என கேள்வியை எழுப்பிஉள்ளார்.
விக்ரம் சிங் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தியில், புதியதாக ஒரு டிரண்ட் உருவாகி உள்ளது. இஸ்லாமியர்கள் வாழும் பகுதிக்குள் பேரணியாக செல்வதும், அங்கு பாகிஸ்தானுக்கு எதிரான கோஷம் எழுப்புவதும். இது எதற்கு? அவர்கள் என்ன பாகிஸ்தானியர்களா? பரேலி மாவட்டம் காய்லாம் கிராமத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. பின்னர் கற்கள் வீசப்பட்டது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது, என குறிப்பிட்டு உள்ளார் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தில் இந்துக்கள் யாத்திரை செல்லும் போது காய்லாம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை குறிப்பிட்டு அவர் இப்பதிவை முன்வைத்து உள்ளார் என தெரிகிறது.