பாட்னா,
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி, டெல்லி மேல்சபை எம்.பி.யாக இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவது, பினாமி சொத்துகள் பரிமாற்றம் உள்ளிட்ட முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. அதனால் சமீபத்தில், லாலு, மிசா பாரதி சம்பந்தப்பட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக, மிசா பாரதிக்கு சொந்தமாக இருந்த ஒரு நிறுவனத்தின் ஆடிட்டரான ராஜேஷ் அகர்வால் நேற்று கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.
ரூ. 1000 கோடி பினாமி சொத்து வழக்கு மற்றும் வருமானவரி ஏய்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் வருமான வரித்துறை லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி மற்றும் அவருடைய கணவருக்கு சம்மன் விடுத்து உள்ளது.
மிசா பாரதி மற்றும் அவருடைய கணவர் சாய்லேஷ் குமார் விசாரணை அதிகாரிகள் முன்னதாக ஜூன் மாதம் ஒன்றாவது வாரம் ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை கேட்டுக் கொண்டு உள்ளது. 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது, அவர்களுடைய வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் கூறிஉள்ளனர்.