ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பில் ஒன்றாக லஷ்கர் இ முஸ்தபா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக இதயத்துல்லா மாலிக் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அவரை ஜம்மு மற்றும் அனந்த்நாக் போலீசார் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்தனர். அவருடைய கூட்டாளிகள் 4 பேர் முன்பே கைது செய்யப்பட்டு இருந்தனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகராக உள்ள ஜம்மு நகர் மீது மிக பெரிய தாக்குதல் நடத்த இதயத்துல்லா மாலிக் திட்டமிட்டு இருந்துள்ளார் என அவரது கூட்டாளிகள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டு மே மாதத்தில் புல்வாமா நகரில் சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் இதயத்துல்லா மாலிக்கும் ஒருவர். அந்த வெடிகுண்டு பின்னர் அழிக்கப்பட்டு விட்டது. இதனால் பெரிய தாக்குதல் தவிர்க்கப்பட்டது என ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.