தேசிய செய்திகள்

விவசாய குடும்பத்தில் பிறந்து துணை ஜனாதிபதி ஆனது எனக்கு மரியாதை; டுவிட்டரில் வெங்கய்யா

விவசாய குடும்பத்தில் பிறந்து துணை ஜனாதிபதி ஆனது எனக்கு மரியாதை என குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்யா நாயுடு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.

இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டும் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில், வெங்கய்யா நாயுடு வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரதீய ஜனதா வேட்பாளர் வெங்கய்யா நாயுடு 516 வாக்குகளும், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகளும் பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்யா நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவருக்கு காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர், பாரதீய ஜனதாவின் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி, அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இந்நிலையில், விவசாய குடும்பத்தில் பிறந்து துணை ஜனாதிபதி ஆனது எனக்கு மரியாதை அளித்துள்ளது என வெங்கய்யா நாயுடு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், இந்த வெற்றி ஜனநாயகத்தின் அழகு மற்றும் வலிமையை விளக்குகிறது என்றும் கூறியுள்ளார். அரசியலமைப்பினை கடைப்பிடிப்பேன் என உறுதியளித்துள்ள அவர், மாநிலங்களவை தலைவர் என்ற முறையில் அதன் மாண்பை காப்பாற்றுவேன். குடியரசு தலைவரின் கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.

கட்சி அளவில், வேட்பாளராக எனக்கு ஆதரவு அளித்த ஒவ்வொரு எம்.பி.க்கும் பணிவுடன் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்த கட்சியினருக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி என வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்