பிரபல பெண் சாமியாரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரக்யா சிங் தாகூர் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், எம்.பி.க்களின் பணிகள் என்னவென்றால் எம்.எல்.ஏ.க்கள் பெருநிறுவன நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து வளர்ச்சியை உறுதி செய்வதாகும். இதனை மனதில் வையுங்கள். நாங்கள் சாக்கடையை சுத்தம் செய்வதற்காக இங்கு வரவில்லை. உங்கள் கழிவறைகளை சுத்தம் செய்யவும் நாங்கள் வரவில்லை. எதற்காக எங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்களோ, அவற்றை நேர்மையாக நாங்கள் செய்வோம், என்று பேசினார்.
மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை மும்மரமாக செயல்படுத்தி வரும் நிலையில் பிரக்யா சிங்கின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜனதாவுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிரக்யாவை டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வருமாறு கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா சம்மன் அனுப்பினார். அதன்படி நேற்று அலுவலகம் சென்ற பிரக்யாவிடம் ஜே.பி. நட்டா கடும் கண்டனம் தெரிவித்தார். கட்சியின் திட்டங்கள் மற்றும் சித்தாந்தங்கள் தொடர்பாக கருத்துகளை தெரிவிக்கும் போது கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.