கடப்பா,
காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா நேற்று ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். கடப்பாவில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து பிரசாரம் செய்தார். கூட்டத்தில் பரூக் அப்துல்லா பேசியதாவது:-
சில ஆண்டுகள் முன்பு ஜெகன் மோகன் ரெட்டி என்னை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் தன்னை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்துக்கு முதல்-மந்திரி ஆக்கினால் காங்கிரஸ் மேலிடத்துக்கு ரூ.1,500 கோடி தருவதற்கு தயாராக இருப்பதாக கூறினார். அவருக்கு அவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து கிடைத்தது என நான் ஆச்சரியம் அடைந்தேன்.
இதுபோன்ற நபரை நீங்கள் வெற்றிபெறச் செய்தால் மாநிலம் மிகவும் மோசமான நிலையை சந்திக்கும். நரேந்திர மோடி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஜெகன்மோகன் ரெட்டிக்கு நீங்கள் ஓட்டுபோட்டால், அது நரேந்திர மோடிக்கு ஓட்டுபோட்டது போலத்தான். இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.