புதுடெல்லி
ஏர்- இந்தியாவின் விமான போக்குவரத்து சந்தைப் பங்கு 14 சதவீதமாக இருக்கிறது. அதன் கடன் சுமையோ ரூ. 50,000 கோடியை எட்டியுள்ளது என்றார் ஜெட்லி, அமைச்சரின் இந்தக்கூற்று தே.ஜ.கூ அரசு ஏர்-இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுக்கும் என்பதையே சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது. இப்பொதுத்துறை நிறுவனத்தை நடத்த ரூ. 50,000 கோடி செலவழிக்கப்படுகிறது. அப்பணத்தை கல்வியை மேம்படுத்த செலவழிக்கலாம் என்று கூறினார் ஜெட்லி. இப்போது நாட்டில் 86 அல்லது 87 சதவீத விமான சேவை தனியாரால் கையாளப்படுகிறது. அதனால் அவர்களால் 100 சதவீத போக்குவரத்தையும் கையாள முடியும். அமைச்சர் தான் 1999-2000 ஆம் ஆண்டில் சிறிது காலம் விமானத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்-இந்தியாவின் பங்குகளை விற்பதற்கு யோசனை தெரிவித்ததாகவும், இப்போது விற்காவிட்டால் பின்னர் விற்பதற்கு ஏதுமிருக்காது என்றும் கூறினார். தான் அவ்வாறு கூறி 18 ஆண்டுகள் போய்விட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 2012 ஆம் ஆண்டில் ரூ. 30,000 கோடி செலவில் ஏர்-இந்தியாவை மீட்டெடுக்கும் பரிந்துரை முன்வைக்கப்பட்டது. அது பத்தாண்டு காலத்திற்கு நீடிக்கும் திட்டமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2015-16 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் ரூ. 105 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது எரிபொருள் விலை குறைவாகவும், பயணியரின் எண்ணிக்கை அதிகரித்தும் காணப்பட்ட நிலையில் சாத்தியப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ. 21,000 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இதில் பயணிகளின் மூலமாக கிடைத்தது ரூ. 16,500 கோடியாகும்.
கடந்த காலங்களில் இரு முறை தனியார்மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பின்னர் கைவிடப்பட்டது. அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும் தனியார்மய பேச்சுக்கள் தொடர்ந்து அலசப்பட்டு வருகின்றன. இப்பின்னணியில் கடந்த வாரம் விமானத்துறை அமைச்சர் அசோக் கஜபதிராஜூ நிறுவனத்தின் கணக்கு வழக்கு மோசமான நிலையிலேயே இருக்கிறது என்றும் வழக்கமான வணிகம் கைக்கொடுக்காது என்றும் கூறினார். என்றாலும் அரசு நிறுவனத்தை தக்க வைக்கவே விரும்புகிறது என்றும் அவர் கூறினார். ஏர்-இந்தியா தனது மரபு வழி வந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தனிப்பட்ட முறையில் ஏர்-இந்தியா நிலைத்து நிற்பதையே விரும்புகிறேன். ஆனாலும் அதை இதே நிலையில் விட்டு வைத்தால் ஒவ்வொரு நாளும் அது நிலைத்திருப்பதற்கான சாத்தியம் பலவீனப்பட்டே வருகிறது என்றார் அமைச்சர்.