ஸ்ரீநகர்,
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாதம் இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிந்து வருகிறது. அதே நேரத்தில் இங்கிலாந்தில் உருமாறி தாக்கும் புதிய வகை கொரோனா வைரசால் அச்சம் எழுந்து உள்ளது.
புதிய வகை கொரோனா தொற்று பரவிவிடாமல் இருப்பதற்காக மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி இங்கிலாந்துடனான விமான சேவை வருகிற 31-ந்தேதி வரை ரத்துசெய்யப்பட்டது. மேலும் அந்த நாட்டில் இருந்து வந்தவர்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது அமலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி ஜனவரி 31-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.