பாட்னா,
பீகார் சட்டசபையில் நேற்று முன்தினம் பீகார் சிறப்பு ஆயுத போலீஸ் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. போலீசுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றுவதற்கு சபைக் காவலர்களுக்கு உதவுவதற்காக போலீசார் அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தங்களை வலுக்கட்டயமாக வெளியேற்றியதைக் கண்டித்து, ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நேற்று சட்டசபையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தள தலைவர் மகேஷ்வர் ஹசாரி, குரல் வாக்கெடுப்பு மூலம் புதிய துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 243 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் அவருக்கு 124 வாக்குகள் கிடைத்தன.
நேற்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள், சட்டசபை வளாகத்தில் ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் புதியோ சவுத்ரியை சபாநாயகராக தேர்ந்தெடுத்து போட்டி சட்டசபையை நடத்தின. முன்னதாக, துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவதற்காக புதியோ சவுத்ரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரோ, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களோ அதற்கான தேர்தலில் பங்கேற்கவில்லை.
புதிய துணை சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்-மந்திரி நிதிஷ்குமார், இத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தே எதிர்க்கட்சியினர் சட்டசபையில் இருந்த ஓட்டம் பிடித்துவிட்டதாகவும், அவர்கள் ஜனநாயகமற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.