தேசிய செய்திகள்

ஜே.இ.இ. முதன்மை தேர்வு: விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் எழுதினார்கள்; மத்திய மந்திரி தகவல்

ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் தேர்வை எழுதியதாக மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. முதன்மை தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு 2 முறை நடத்தப்படும். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் தேர்வு நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தேர்வு கொரோனா தொற்று காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி தொடங்கி 6-ந்தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வை நாடு முழுவதிலும் இருந்து சுமார் 9 லட்சம் பேர் எழுத இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் 8 லட்சத்து 58 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத விருப்பம் தெரிவித்து இருந்ததாக தற்போது கூறியுள்ளார். தேர்வு தொடங்குவதற்கு முன்பே கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் இருக்கும் இந்த நேரத்தில் தேர்வு நடத்துவதாக பல எதிர்ப்புகள் வந்தன.

இருப்பினும் அவற்றை மீறி மத்திய அரசு தேர்வை நடத்தி முடித்து இருக்கிறது. அதன்படி, தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் தேர்வை எழுதியதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு 8 லட்சத்து 58 ஆயிரம் பேர் விண்ணப்பித்ததில், 6 லட்சத்து 35 ஆயிரம் பேர் தேர்வை எழுதி இருக்கின்றனர். மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் மாணவர்களுக்கு தேர்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தன. இதற்காக அனைத்து மாநில அரசுகளையும் பாராட்டுகிறேன். இந்த தேர்வில் பங்குபெறாத மாணவர்களில் சிலர், கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று இருக்கலாம். அதனால் அவர்கள் இந்த தேர்வுக்கு வராமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜே.இ.இ. முதன்மை தேர்வு நடந்த ஜனவரி, ஏப்ரல் மாதத்தில் முறையே 94.11 சதவீதம், 94.15 சதவீதம் மாணவர்கள் வருகை தந்து தேர்வை எழுதி இருந்தனர். தற்போது நடைபெற்று முடிந்துள்ள முதன்மை தேர்வு முடிவு அடிப்படையில் 2 லட்சத்து 45 ஆயிரம் பேர் அடுத்தகட்டமாக வருகிற 27-ந்தேதி நடைபெறும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு எழுத தகுதியுள்ளவர்களாக கருதப்படுவார்கள். அதில் வெற்றி பெறும் மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள 23 முதன்மையான இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்