தேசிய செய்திகள்

அனந்த குமாருக்கு மந்திரியாக நீடிக்க என்ன தகுதி இருக்கிறது? பிரதமர் மோடிக்கு ஜிக்னேஷ் மேவானி கேள்வி

அனந்த குமாருக்கு மந்திரியாக நீடிக்க என்ன தகுதி இருக்கிறது? என பிரதமர் மோடிக்கு ஜிக்னேஷ் மேவானி கேள்வியை எழுப்பி உள்ளார். #JigneshMevani #AnantkumarHegde

தினத்தந்தி

ஆமதாபாத்,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறை மந்திரியாக இருந்து வருபவர் அனந்தகுமார் ஹெக்டே. இவர், தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசி வருகிறார். சமீபத்தில், மதசார்ப்பற்றவர்கள் பெற்றோர் யார் என தெரியாதவர்கள் எனவும், அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் எனவும் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பேசி இருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும் தலித் அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கர்நாடக மாநிலம் பல்லாரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள அனந்தகுமார் ஹெக்டே சென்ற போது தலித் அமைப்பை சேர்ந்தவர்கள், அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று கூறியதை கண்டித்து ஹெக்டேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவருக்கு கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அனந்த குமார் ஹெக்டே, சாலையில் நடந்து செல்லும் போது தெரு நாய்கள் குரைப்பது பற்றி கவலைப்படக்கூடாது. அதுபற்றி சிந்தித்து தலைவலியை ஏற்படுத்தி கொள்ள விரும்பவில்லை என மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கும் பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தலித் இன தலைவர்களில் ஒருவரும் குஜராத் மாநிலம் வத்கம் சட்ட மன்ற தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவருமான ஜிக்னேஷ் மேவானி பாரதீய ஜனதாவை ஒவ்வொரு நிலையிலும் விமர்சனம் செய்து வருகிறார். அனந்தகுமார் ஹெக்டேவின் பேச்சுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி உடனடியாக அனந்த்குமார் ஹெக்டேவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய பேஸ்புக் இணையதளத்தில் விரிவான அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

அன்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, அனந்த குமார் ஹெக்டேவை திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்க அவரிடம் என்ன விதமான தகுதியையும், திறமையையும் நீங்கள் கண்டீர்கள்?என டுவிட்டரில் ஜிக்னேஷ் மேக்வானி கேள்வியை எழுப்பி உள்ளார். ஹெக்டே கண்டிப்பாக பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். தலித் மக்களை நாய்கள் என விமர்சனம் செய்தவரை பதவியில் இருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் தலித்தான், இந்திய அரசியலமைப்பில் முக்கிய பொறுப்பை கொண்டு உள்ள நீங்கள் அனந்த்குமார் ஹெக்டே பேச்சின் தீவிரத்தை உணர்ந்து அவரை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது