ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு மேற்கொண்ட பக்தர்களின் புனித யாத்திரை தடைப்பட்டு உள்ளது. காஷ்மீரின் உத்தம்பூரில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
எனினும் மழையால் சாலையை சீர் செய்யும் பணிகள் பாதிப்படைந்து உள்ளன. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டு உள்ளது.
இதனிடையே நேற்றிரவு ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த வழியே சென்ற நபர் ஒருவர் சிக்கி கொண்டார். நிலச்சரிவில் அவர் மண்ணுக்குள் புதைந்து போயுள்ளார்.
இந்த நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 72வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் அஜாக்சி என்ற மோப்ப நாய் சென்றுள்ளது. அது, மண்ணில் புதைந்து போன நபரின் இருப்பிடம் பற்றி வீரர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது.
அந்த பகுதிக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் உடனடியாக சென்று மண்ணில் புதைந்திருந்த நபரை மீட்டுள்ளனர். பின்பு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.