ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் வனத்துறை அதிகாரி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுகொலை செய்யப்பட்டார். குண்டுகள் உடலில் துளைத்து உயிரிழந்த வனத்துறை அதிகாரி தாரிக் அஹ்மத் மாலிக் (38) என போலீசாரால் அடையாளம் காணப்பட்டது. அதிகாரி கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த யூசுஃப் தார் காண்ட்ரூ அதிகாரி கொலை வழக்கில் ஈடுபட்டிருப்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஜம்முவில் பயங்கரவாதிகள் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்திருந்த பயாஸ் அகமது ஷா என்னும் போலீஸ் அதிகாரி தீவிரவாதிகளால் சுட்டுகொலை செய்யப்பட்டார். அதே போல், புல்வாமா மாவட்டத்தில் முகமது யாகூப் ஷா என்ற சிறப்பு போலீஸ் அதிகாரியும், குப்வாரா மாவட்டத்தில், பா.ஜனதாவைச் சேர்ந்த ஷபிர் அகமது பட் என்பவரும் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுகொலை செய்யப்பட்டனர். இதனிடையே, பயங்கரவாதிகளால் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சுட்டு கொல்லப்படும் அடக்குமுறை சம்பவத்திற்கு போலீஸ் அதிகாரி ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.