தேசிய செய்திகள்

காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை: பாகிஸ்தானின் உளவு அமைப்பு காரணம்

காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு காரணம் என்று மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ரைசிங் காஷ்மீர் என்ற பத்திரிகையின் ஆசிரியரான சுஜாத் புகாரி (வயது 50), நேற்று முன்தினம் தனது காரில் சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் அவரது கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சுஜாத் புகாரியும், அவருடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்மந்திரி மெகபூபா முப்தி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

இது குறித்து பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி ஆர்.கே. சிங் கூறுகையில், ஐ.எஸ்.ஐன் வழிக்காட்டுதலின் படி தான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர் என்றார்.

இதற்கிடையே சுஜாத் புகாரி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொலை நடந்த சமயத்தில் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் செல்லும் காட்சிகள் இருந்தன.

இதனால் அவர்கள்தான் கொலையாளிகளாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அந்த 3 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்