புதுடெல்லி,
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியாக இருப்பவர் செல்லமேஸ்வரர். இவர், உட்பட 3 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக கடந்த ஜனவரி 12 ஆம் தேதி போர்க்கொடி தூக்கினர். வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது புகார் தெரிவித்தனர். இதனால், நீதித்துறையில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாகவும், அதனால் எல்லா நீதிபதிகளையும் அழைத்து விவாதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு செல்லமேஸ்வர் கடிதம் எழுதினார். இதனால், இந்த ஆண்டின் தொடக்கம் முதலே நீதிபதி செல்லமேஸ்வர் கருத்துக்களும் செயல்களும் விவாதத்திற்கு ஆளானது. தலைமை நீதிபதிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள செல்லமேஸ்வர் வரும் ஜூன் 22ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
ஓய்வு பெற உள்ளதையொட்டி செல்லமேஸ்வருக்கு பிரிவு உபசார விழா வழங்க உச்ச நீதிமன்ற பார் அசோஷியசன் திட்டமிட்டது. ஆனால், பார் அசோஷியேசன் வழங்கவிருந்த பிரிவு உபசார நிகழ்வை மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் நிராகரித்துள்ளார். பார் அசோஷியனை சேர்ந்தவர்கள் செல்லமேஸ்வர் இல்லத்திற்கே சென்று பேசினர். ஆனால், வர முடியாது என திட்டவட்டமாக செல்லமேஸ்வர் மறுத்து விட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக விழாவில் பங்கேற்க இயலவில்லை என செல்லமேஸ்வர் கூறியதாக பார் அசோஷியனைச்சேர்ந்தவர்கள் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.