புதுடெல்லி,
கடந்த 2013-ம் ஆண்டு, மத்தியபிரதேச மாநிலத்தில் 9 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டார். அதுதொடர்பாக கைது செய்யப்பட்டவருக்கு கீழ் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மத்தியபிரதேச ஐகோர்ட்டும் மரண தண்டனையை உறுதி செய்தது.
அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், மனுதாரருக்கு மரண தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட கீழ் கோர்ட்டு மற்றும் மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
மேலும், வழக்குகளை கையாள்வது தொடர்பாக நீதிபதிகள் பரபரப்பு கருத்துகளை தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதாவது:-
குற்ற வழக்குகளில் விரைவாக தீர்வு காண்பது சந்தேகத்துக்கு இடமின்றி தேவையானதுதான். ஆனால், வழக்குகளை விரைவுபடுத்தும் வழிமுறையில், அடிப்படை அம்சங்களான நேர்மையான விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பு அளித்தல் ஆகியவை அடிபடக்கூடாது.
வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு அளிக்கும் நடவடிக்கையில், நீதி பலி கொடுக்கப்படுவதையோ, குழி தோண்டி புதைக்கப்படுவதையோ அனுமதிக்கக்கூடாது.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் 2013-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி கைது செய்யப்படுகிறார். 13-ந் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. 19-ந் தேதி, குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. மார்ச் 4-ந் தேதி, மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அதே ஆண்டு, ஜூன் 27-ந் தேதி, மத்தியபிரதேச ஐகோர்ட்டு இந்த தண்டனையை உறுதி செய்கிறது. இவ்வளவு விரைவாக வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவுபவராக ஒரு வக்கீல், பிப்ரவரி 19-ந் தேதி நியமிக்கப்படுகிறார். அதே நாளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. அப்போதே அவரை அழைத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதிட அழைத்துள்ளனர்.
அவர் வழக்கு விவரங்களை அறிந்து கொள்ள, வாதிட தயாராக போதிய கால அவகாசம் அளிக்க வேண்டாமா? குறைந்தபட்சம் 7 நாட்கள் அவகாசம் அளித்தால்தான், அவர் வழக்குக்கு தயாராக முடியும்.
கீழ்கோர்ட்டு கடைப்பிடித்த அணுகுமுறை, வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி இருக்கலாம். ஆனால், நீதியை காப்பாற்றவில்லை.
எனவே, எதிர்காலத்தில், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கத்தக்க வழக்குகளில், கோர்ட்டுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எல்லா வாய்ப்புகளும் அளிக்கப்பட வேண்டும். 10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள வக்கீலைத்தான், கோர்ட்டுக்கு உதவுபவராக நியமிக்க வேண்டும்.
இந்த வழக்கை கீழ்கோர்ட்டு மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.