தேசிய செய்திகள்

கேரள வெள்ளத்தில் தவித்த 126 பேரை 9 மணி நேரத்தில் மீட்ட கன்னியாகுமரி மீனவர்கள்

கேரள வெள்ளத்தில் தவித்த பொதுமக்கள் 126 பேரை, 9 மணி நேரத்தில் கன்னியாகுமரியிலுள்ள இரவிபுத்தன்துறையைச் சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டனர். #KeralaFloods

தினத்தந்தி

ஆலப்புழா,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோரப்பகுதிகளில் அமைந்துள்ள இரவிபுத்தன்துறை கிராமத்தை சேர்ந்த 20 மீனவர்கள், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் மீட்பு பணியில் ஈடுபட படகுகளுடன் சென்றனர். இந்நிலையில் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள செங்கனூர் பகுதியில் வெள்ளத்தால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவித்த 126 பேரை படகுகளின் மூலம் மீட்ட மீனவர்கள், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 9 மணி நேரத்தில் வெள்ளத்தில் தவித்த மக்களை அவர்கள் மீட்டெடுத்தனர். மேலும் அப்பகுதியில் வெள்ளத்தால் இறந்த பெண்ணின் உடலை கண்டெடுத்த மீனவர்கள், அரசாங்க மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர்.

இந்நிலையில் மீனவர்களின் செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் 20 மீனவர்களுக்கும் தலைமையாக செயல்பட்ட எஸ் ஜஸ்டின் என்பவர் வெள்ள மீட்பு பணிகள் குறித்து பேசினார். இது குறித்து அவர் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு உதவ நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், இது குறித்து யாரை தொடர்பு கொண்டு கேட்பது என எங்களுக்கு தெரியவில்லை. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மீன்பிடித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் எங்களை சனிக்கிழமை இரவு அன்று அழைத்தனர். பின்னர் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட எர்ணாகுளத்திற்கு செல்ல தயாராக இருந்தோம். 3 மோட்டார் ஃபைபர் படகுகள், 5000 தண்ணீர் பாட்டில்கள், படகுகளுக்கு தேவையான எரிபொருள்கள், 50000 மதிப்புள்ள வெள்ள நிவாரணப்பொருட்களை எடுத்து கொண்டு நள்ளிரவு 1 மணிக்கு இரவிபுத்தன்துறையிலிருந்து கிளம்பினோம். படகை எடுத்து செல்லும் வாகனம் ஒன்றிற்கு 12000 செலுத்தி, ஞாயிறு காலை 8 மணிக்கு ஆலப்புழா பகுதியை வந்தடைந்தோம். அங்கிருந்தவர்கள் செங்கனூர் பகுதியில் வெள்ளத்தால் பலர் தவிப்பதாக கூறினர். உடனே அப்பகுதிக்கு சென்று மூன்று குழுக்களாய் பிரிந்து பல இடங்களில் சிக்கி தவித்த மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தோம் எனக் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்