புதுடெல்லி,
கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இதனால் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நாளை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தனது செய்தியாளர் சந்திப்பில், மேலும் கூறியதாவது:-
அரசியல் அமைப்பை காப்பாற்ற வேண்டிய நபரே அதை மீறுகிறார். சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை நிரூபிக்க 15 நாள் கால அவகாசம் கொடுத்தது இல்லை. அதிகபட்சம் 7 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். பிற கட்சிகளை உடைக்கவே பாஜகவுக்கு 15 நாட்கள் அவகாசம் தரப்பட்டது. எந்த அடிப்படையும் இல்லாமல் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார்.
பாஜக உரிமை கோரும் முன்பே நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. கோவா, மணிப்பூர், மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க ஏன் அழைக்கவில்லை? இவ்வாறு அவர் பேசினார்.