பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ந்தேதி நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று உள்ளது. 137 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. இதனால், தேர்தலில் பா.ஜ.க. தேல்வி அடைந்து உள்ளது.
இதனை தொடர்ந்து, கர்நாடக முதல்-மந்திரி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான பசவராஜ் பொம்மை, ராஜ் பவனில் கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை இன்று நேரில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தினை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவர்னரிடம் எனது ராஜினாமா கடிதம் வழங்கினேன். அது ஏற்கப்பட்டு விட்டது என கூறியுள்ளார். கவர்னரை சந்திக்கும் முன் அவர் கூறும்போது, பா.ஜ.க.வின் இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன்.
இந்த தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு தேசிய கட்சியாக ஒவ்வொரு விசயங்களை பற்றியும் நாங்கள் ஆய்வு செய்வோம். எங்களுடைய அனைத்து, தவறுகளையும் கூட நாங்கள் ஆய்வு செய்து நாடாளுமன்ற தேர்தலில் மீண்டெழுந்து வருவோம் என்று கூறியுள்ளார். கர்நாடகாவில், 36 ஆண்டுகளுக்கு பின்னர் 137 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தனி பெரும் கட்சியாக கர்நாடகாவில் உருவெடுத்து இருக்கிறது.