பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி 29 மந்திரிகள் பதவி ஏற்றனர். மந்திரிசபையில் இன்னும் 4 இடங்கள் காலியாக உள்ளன. மந்திரி பதவிக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே போட்டி போட்டு வருகிறார்கள். அதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஆலோசிக்க அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசித்து அதற்கு ஒப்புதல் பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்த மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, எம்.எல்.ஏ.க்கள் ரேணுகாச்சார்யா, திப்பாரெட்டி உள்ளிட்டோருக்கு பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.