பெங்களூரு,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. இந்த பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கடந்த 10-ந் தேதி நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.85.31 ஆகவும், டீசல் ரூ.78 ஆகவும் விற்பனையானது. பெட்ரோல் விலை 100 ரூபாயை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. எக்காரணம் கொண்டும் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க மாட்டோம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்த நிலையில், கர்நாடாகவில் பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி ரூ.2 குறைக்கப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். இந்த வரி குறைப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலை கர்நாடகாவில் 2 ரூபாய் வரை குறையும் என தெரிகிறது. ஏற்கனவே, ஆந்திர மாநில அரசு, 2 ரூபாய் வரி குறைப்பு செய்தது. ராஜஸ்தானில் , பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டது.