பெங்களூரு,
குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழை வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். முதல்-மந்திரி குமாரசாமி அங்கு 2 நாட்கள் ஹெலிகாப்டரில் பறந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். குடகில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும், நிவாரண பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்வதற்கான நிலத்தை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக அரசு வெளியிட்ட அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள், பயிர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நிவாரண உதவி வழங்கப்படும். வெள்ளத்தால் நில ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்கள் வழங்கப்படும். சாலைகள் சேதம் குறித்து பறக்கும் கேமரா மூலம் ஆய்வு நடத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.