பெங்களூரு:
மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், டுவிட்டர் நிறுவனத்திற்கு (தற்போது எக்ஸ் கார்ப்) கடந்த ஆண்டு (2022) ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் சர்ச்சைக்குரிய 1,474 டுவிட்டர் கணக்குகள், 175 பதிவுகள், ஹேஸ்டேக்குகளை நீக்கும்படி டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை டுவிட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை.
ஓராண்டுக்கு பிறகு அந்த நிறுவனம் கர்நாடக ஐகோர்ட்டில் மனுவை தாக்கல் செய்து, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித், மத்திய அரசின் உத்தரவை பின்பற்றாத டுவிட்டர் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி பி.பி.வராலே-நீதிபதி எம்.ஜி.எஸ். கமல் ஆகியோர் அடங்கிய அமர்வில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஐகோர்ட்டில் நேற்று அந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது, 2 நீதிபதிகள் அமர்வு, அடுத்த விசாரணை நடைபெறும் வரை தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் அடுத்த ஒரு வாரத்திற்குள் அபராத தொகையில் 50 சதவீதம் அதாவது ரூ.25 லட்சத்தை இந்த கோர்ட்டில் அந்த நிறுவனம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் நேர்மையை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இந்த தொகையை டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளதாக நீதிபதிகள் கூறினர்.