பெங்களூரு,
கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மந்திரிசபையில் சிறுதொழில் துறை மந்திரியாக இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவுக்கு ஆதரவு அளித்தார். இதைத்தொடர்ந்து கர்நாடக அரசியலில் ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பங்களால், குமாரசாமி அரசு பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை பறிகொடுத்தது.
இதற்கு மத்தியில், சுயேட்சை எம்.எல்.ஏவான சங்கரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு அளித்து இருந்தது. கடந்த ஜூன் மாதம் சங்கர் தமது கே.பி.ஜே.பி. கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவர் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டதால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி சங்கருக்கு எதிராக சபாநாயகரிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சுயேட்சை எம்.எல்.ஏ ஆர். சங்கர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.