தேசிய செய்திகள்

கர்நாடகா: பஸ் மோதி இரண்டு யாத்ரீகர்கள் பலி

யாத்ரீகர்கள் தர்மஸ்தலத்திற்கு நடந்து சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் ஹாசன் தாலுகாவில் உள்ள ஹெக்கடிஹெள்ளி அடுகே தேசிய நெடுஞ்சாலை-75 இல் நடந்து சென்ற யாத்ரீகர்கள் மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய மற்றொருவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மாண்டியா மாவட்டத்தில் உள்ள அனகோலு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (60) மற்றும் குமார் (55) என அடையாளம் காணப்பட்டனர். பின்னர் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

யாத்ரீகர்கள் தர்மஸ்தலத்திற்கு நடந்து சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.