ஜெய்பூர்,
வசுந்தரா ராஜே தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் 2 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
அஜ்மீர், அல்வர் பாராளுமன்ற தொகுதிகளிலும், மண்டல்கிரக் தொகுதி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பத்மாவத் படத்திற்கு ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தடை விதித்தன. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தடையை ரத்து செய்து பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. இதனையடுத்து படம் வெளியானது. ஆனால் கர்னி சேனாவினர் போராட்டம் நடத்தியதால் படம் வெளியாவதில் சிக்கல் நேரிட்டது. திரையரங்குகள் படத்தை வெளியிடுவதை நிராகரித்தன. இதற்கிடையே ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத்தேர்தல் முடிவில் காங்கிரஸ் வெற்றி பெற்று பாரதீய ஜனதா படுதோல்வியை தழுவி உள்ளது.
ராஜஸ்தானில் பாரதீய ஜனதா தோல்வி தொடர்பாக ராஜ்புத் கர்னி சேனா தலைவர் லோகேந்திரா சிங் கல்வி பேட்டியளிக்கையில், ராஜஸ்தானில் இடைத்தேர்தல் ஆளும் கட்சியை சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெறாதது இதுவே முதல் முறையாகும். தேர்தல் நடைபெற்ற போது படம் வெளியிடப்பட்டது. படத்தை தடை செய்யவில்லை, அதனுடைய முடிவுதான் இப்போது வெளியாகி உள்ளது. பத்மாவத் படத்தை தடை செய்வது ஒன்றுதான் வழி என பிரதமர் மோடியிடம் எடுத்துரைப்பேன்,என கூறிஉள்ளார். பத்மாவத் படம் சர்ச்சைக்கு இடையே வெற்றிகரமாக ஓடிவருகிறது. படம் வெளியான போது பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவும் மவுனம் ஒன்றையே பதிலாக கொண்டிருந்தது என்பது அனைவரும் அறிந்தது.