ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கடந்த 9ந்தேதி பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், மசூதிக்குள் பதுங்கி இருந்து தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 5 பேரை வீரர்கள் சுட்டு கொன்றனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மசூதிக்குள் இருந்து கொண்டு பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன என காஷ்மீர் ஐ.ஜி. விஜய குமார் இன்று கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்பொழுது, கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19ந்தேதி நடந்த பேம்பூர் என்கவுண்ட்டரில், ஜமியா மசூதிக்குள் புகுந்து தஞ்சமடைந்த பயங்கரவாதிகளில் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதேபோன்று, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி சோப்பூரில் உள்ள மசூதி ஒன்றில் இருந்து கொண்டு பயங்கரவாதிகள் திடீரென மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை (சி.ஆர்.பி.எப்.) நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் வீரர் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். 3 வீரர்கள் கடுமையான காயமடைந்தனர். கடந்த 9ந்தேதி சோபியான் மாவட்டத்தில் மசூதிக்குள் சுற்றி வளைக்கப்பட்ட 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து, பயங்கரவாதிகள் பேம்பூர், சோப்பூர் மற்றும் சோபியான் நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த மசூதிகளை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இதுபோன்ற செயல்களை பொதுமக்கள், பள்ளிவாசல் நிர்வாகம், சமூக அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.