ஐதராபாத்,
தெலுங்கானா மாநில அரசு தனது அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு அறிவித்துள்ளது. இதனை மாநில சட்டசபையில் முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவ் நேற்று அறிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், சம்பள உயர்வால், ஒப்பந்த, வெளிப்பணி ஊழியர்கள் உள்ளிட்ட 9.17 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவர். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 61 ஆக அதிகரிக்கப்படுகிறது. ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான பணிக்கொடை தொகை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று சந்திரசேகர ராவ் கூறினார்.
மேலும் தகுதியுள்ள 80 சதவீத ஊழியர்களுக்கு ஏற்கனவே பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஊழியர்களுக்கும் விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாகர்ஜுனசாகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஊதிய திருத்தியமைப்புக்கு நிபந்தனையுடன் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, அரசியல் பலன் பெறும் வகையில், ஊதிய உயர்வு குறித்து தேவையற்ற விளம்பரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருந்தது.