புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை மாநில அரசுகள் கொள்முதல் செய்து கொள்ள மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்களிடம் தடுப்பூசி கோரி மாநில அரசுகள் ஒப்பந்தம் கோரியிருந்தன.
ஆனால், பைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் இந்திய அரசிடம் மட்டுமே தங்கள் பரிவர்த்தனைகளை வைத்துக்கொள்வோம் எனக் கூறி மாநில அரசுகளுக்கு நேரடியாக வழங்க மறுத்துவிட்டன.
அதேவேளையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசியை டெல்லிக்கு விநியோகிக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். எத்தனை தடுப்பூசிகள் வழங்கப்படும் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் செயல் திறன் 91.6 ஆகும்.