திருவனந்தபுரம்,
சிறப்பு சட்டப்பேரவை ஒருநாள் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கூடியது. கேரள மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மழையின் போது உதவிய அனைவருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்தார்.
ஆக. 28 வரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.738 கோடி நிதி வந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமா என்பது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 483 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது 305 நிவாரண முகாம்களில் 59,296 பேர் தங்கியிருக்கின்றனர் என கூறினார்.
வெள்ள பாதிப்பு குறித்து கேரள சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. மாநில அரசை விமர்சித்த ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் 2 பேர் பேச அனுமதி மறுக்கப்பட்டது.