சென்னை,
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் முதல் 5 மாநிலங்களில் கேரளா தற்போது 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்த சூழலில் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகளுக்கு கடந்த 6ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பினராயி விஜயனுக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைந்து பூரண நலம் பெற விழைகிறேன். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.