திருநங்கை
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் ஹனீபா. 3 சகோதரிகளுக்கு சகோதரனாகப் பிறந்தார். பிளஸ் 2 படிக்கும்போது தன்னை பெண்ணாக உணர்ந்த ஹனீபா, தனது அடையாளத்தை வெளிப்படுத்தியபோது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார். இறுதியாக 2017-ல் தனது குடும்பத்தைவிட்டு வெளியேறினார்.
கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு 20-வது வயதில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹனீபா, ஹீனாவாக மாறினார். தற்போது 22 வயதாகும் ஹீனா திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை (வரலாறு) முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஆணாக மாறிய பெண் ஒருவருடன் அவர் திருவனந்தபுரத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.
தேசிய மாணவர் படை
பள்ளி நாட்களில் ஹனீபாவாக தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.) இருந்த அவர் தற்போது கல்லூரியிலும் என்.சி.சி.யில் சேர விரும்பினார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இது, 2019-ம் ஆண்டு திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஐகோர்ட்டு உத்தரவு
இந்த வழக்கில் ஹீனாவை என்.சி.சி.யில் அனுமதிக்குமாறு கேரள ஐகோர்ட்டு கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டது. இத்தீர்ப்பில், 2019-ம் ஆண்டு சட்டப்படி திருநங்கை ஒருவருக்கு திருநங்கையாக அங்கீகரிப்படுவதற்கான உரிமை மட்டுமின்றி, சுயமாக உணரப்பட்ட பாலின அடையாளத்துக்கான உரிமையும் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.மேலும் என்.சி.சி.யில் திருநங்கைகளை சேர்க்கும் வகையில் 1948-ம் ஆண்டு என்.சி.சி. சட்டத்தில் உரியதிருத்தம் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.