தேசிய செய்திகள்

பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் பாதிரியார்களை கைது செய்ய ஐகோர்ட் அனுமதி

பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள் கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என கேரள ஐகோர்ட் மறுத்து விட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒரு பெண், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபையை சேர்ந்த ஒரு தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்கச்சென்று, 8 பாதிரியார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார்.

அவர், தனது திருமணத்துக்கு முன்பே, தனது திருச்சபையை சேர்ந்த ஒரு பாதிரியாருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பாவ மன்னிப்பு கேட்டார். அவருக்கு பாவ மன்னிப்பு வழங்கிய பாதிரியார், அப்பெண் கூறியதை அவருடைய கணவரிடம் கூறி விடுவதாக மிரட்டி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

அந்த காட்சியை வீடியோ படமாக எடுத்து, மற்றொரு பாதிரியாருக்கு அனுப்பி வைத்தார். அதை வைத்து அந்த பாதிரியாரும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். இதுபோன்று மொத்தம் 8 பாதிரியார்கள் அப்பெண்ணை சீரழித்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக, அவருடைய கணவர், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபை நிர்வாகத்திடம் புகார் செய்தார். அப்போது, அவருக்கும், நிர்வாகிக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, இந்த சர்ச்சை வெடித்தது.

இந்த நிலையில் இது குறித்து அந்த பெண்ணின் கணவர் புகார் கொடுத்ததை தொடர்ந்து கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜெய்ஸ் கே. ஜார்ஜ், ஜோப் மேத்யூ, ஜான்சன் பி.மேத்யூ ஆகிய 4 பேர்மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பாதிரியார்கள் ஜோப் மேத்யு, ஆபிரகாம் வர்க்கீஸ் ஆகியோர் கேரள உயர்நீதி மன்றத்தில், இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று கேரள உயர் நீதி மன்றத் தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், கேரள உயர்நீதி மன்றம், இந்த பாலியல் வழக்கில், காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, முன்ஜாமின் தர மறுத்துவிட்டது. மேலும், இந்த பாலியல் வழக்கில் அரசு எடுத்துள்ள மற்றும் எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து நீதி மன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தது.

இதன் காரணமாக புகாருக்கு ஆளான பாதிரியார்கள் 4 பேரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாதிரியார்கள் மீதான புகார் குறித்து தொடக்கத்தில் காவல்துறை புகார் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டதின் பேரிலும், சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மாநில டிஜிபிக்கு எழுதிய கடிதம் காரணமாகவும் காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...