திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதனால் சபரிமலையில் தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்களால் செல்ல முடியவில்லை.
ஆனால் நேற்று முன்தினம் அதிகாலையில் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (வயது 44), பிந்து (42) என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரம் இந்து அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக கேரளாவை சேர்ந்த இந்து அமைப்புகளும், பா.ஜனதாவினரும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் நேற்று முன்தினம் முதலே மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் அரங்கேறின.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடத்த சபரிமலை கர்ம சமிதி என்ற அமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி பா.ஜனதா ஆதரவுடன் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடந்தது.
இதையொட்டி மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் இயங்கவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன், பஸ் நிலையங்களில் ஏராளமான பயணிகள் காத்துக்கிடந்தனர். சில இடங்களில் மட்டும் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் இயங்கின.
மேலும் கடைகள், ஓட்டல்கள் போன்ற வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதைப்போல கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதுடன், பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த முழு அடைப்பால் மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
சபரிமலையில் பெண்கள் நுழைந்ததை கண்டித்து பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருவனந்தபுரம், கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், திருச்சூர் போன்ற மாவட்டங்களில் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் பேரணிகளும், போராட்டங்களும் நடத்தினர். இந்த போராட்டம் பல இடங்களில் கலவரமாக மாறியது.
சாலைகளில் டயர்களை எரித்தும், கிரானைட் கற்களை கொண்டு தடை ஏற்படுத்தியும் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினர். சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் வாகனங்கள், அரசு பஸ்கள் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் பல இடங்களில் கடைகளின் ஷட்டர்களை இறக்கி வலுக்கட்டாயமாக மூடினர். சில கடைகள் அடித்தும் நொறுக்கப்பட்டன.
கண்ணூர் மாவட்டத்தின் தலசேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்தி வரும் பீடி நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அது வெடிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதைப்போல நெடுமங்காடு போலீஸ் நிலையத்திலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மலப்புரம், எர்ணாகுளம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் இடதுசாரி கட்சி அலுவலகங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். பாலக்காட்டில் இடதுசாரிகளின் நூலகம் ஒன்றும் சூறையாடப்பட்டது.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா தொண்டர்களுக்கும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் திருச்சூரில் நடந்த மோதலில் பா.ஜனதா தொண்டர்கள் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவனந்தபுரத்தில் கண்டன பேரணி நடத்திய போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் கண்டன பேரணி நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இதைப்போல மாநிலம் முழுவதும் நடந்த வன்முறையில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதனால் பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
முன்னதாக திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த கண்டன பேரணியில் நடந்த வன்முறையில் சந்திரன் உண்ணித்தான் (வயது 55) என்ற அய்யப்ப பக்தர் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இரவில் மரணமடைந்தார்.
இதைப்போல திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மையத்துக்கு நேற்று சிகிச்சைக்காக வந்த பதும்மா (64) என்ற மூதாட்டி, ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்தார். முழு அடைப்பு காரணமாக ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பதும்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாநிலத்தில் முழு அடைப்பு நடந்தாலும் சபரிமலை செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. இதனால் சபரிமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கம் போல அதிகமாகவே இருந்தது.
முழு அடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் நடந்த வன்முறை தொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.
சபரிமலையில் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியும் நேற்று கருப்பு தினம் அனுசரித்தது. இதையொட்டி முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற இளைஞர் காங்கிரசார் சிலர், முதல்-மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மோதி காயமடைந்தனர்.