திருவனந்தபுரம்,
கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழை மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில், 395 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6911 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இதற்காக மக்கள் காலையிலேயே வரிசையில் வந்து நின்றனர். இதன்பின் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் முறையாக பின்பற்றப்படும் என்றும் வாக்காளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் மாநில தேர்தல் கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய வாக்கு பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த முதற்கட்ட தேர்தலில், ஆலப்புழா மாவட்டத்தின் சேர்த்தலை பகுதியில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் கொரோனா நோயாளி ஒருவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இதேபோன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்துதல் முகாமில் உள்ள மற்றொரு நபர் பாதுகாப்பு கவச உடைகள், முக கவசம் ஆகியவற்றை அணிந்து கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றி வாக்களித்து உள்ளார். அவர்களுடன் பாதுகாப்பிற்காக சுகாதார பணியாளர்களும் வந்திருந்தனர்.