திருவனந்தபுரம்,
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த ஜூலை 9ந்தேதியில் இருந்து இதுவரை 12 பேர் கனமழையால் பலியாகி உள்ளனர். இதுவரை 6 பேரை காணவில்லை.
கேரளாவின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தினால் சூழப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று ரெயில் தண்டவாளங்களில் நீர் சூழ்ந்து சிக்னல் அமைப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்னம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு கனமழையினால் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய இரு மாவட்டங்களிலும் கல்வி நிறுவனங்கள் இன்று தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், கேரளாவில் 8 ஆயிரத்து 33 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 693 பேர் 265 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ள நீர் பல இடங்களில் இன்னும் வடியவில்லை என கட்டுப்பாட்டு அறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
வெள்ள நீரால் சில பகுதிகளில் சாலை போக்குவரத்தும் தடைப்பட்டு உள்ளது. இந்த மழை தொடர்ந்து ஜூலை 19ந்தேதி வரை நீடிக்கும் என தகவல் தெரிவிக்கின்றது.