தேசிய செய்திகள்

சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் : கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சி.பி.ஐ. முன் ஆஜராக வேண்டும் என்று கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது. அவரை கைது செய்ய தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநிலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது.

இந்த விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் ஒத்துழைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தச் சென்றபோது, அவர்களை உள்ளூர் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, பின்னர் விடுவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 2 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவை:-

* பல முறை நோட்டீஸ் அனுப்பியும், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை. வழக்கு தொடர்பான ஆதார ஆவணங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை. எனவே அந்த ஆவணங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

* சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்ற போது அவர்களை மேற்கு வங்காள போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதும், அரசியல்வாதிகளுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை ஆகும். எனவே அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

இந்த மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீக் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. 15 நிமிடங்கள் விசாரணை நடந்தது.

அப்போது 2014-ம் ஆண்டு முதல் நடந்துள்ள சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் விளக்கி கூறினர்.

அப்போது கே.கே.வேணுகோபால் கூறும்போது, கடந்த 2014-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மேற்கு வங்காள மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான அனைத்து வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன. அதற்கு முன்பு அந்த மாநில அரசே சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இது தொடர்பாக ஏப்ரல் 2014-ல் இருந்து 2017 வரை சி.பி.ஐ. பல்வேறு ஆவணங்களை திரட்டியது. பலரும் கைது செய்யப்பட்டனர். அதில் சிலர் மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தனர். போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார், மாநில அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர். அவர், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக சி.பி.ஐ.க்கு தாக்கல் செய்த ஆவணங்கள் எதுவும் முழுமையானதாக இல்லை. எனவே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து 3 முறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் அதற்கும் பதில் எதுவும் அளிக்காததால் சி.பி.ஐ. தரப்பில் அந்த மாநிலத்தின் போலீஸ் டைரக்டர் ஜெனரலுக்கு கடிதம் அனுப்பப்பட்டது என்றார்.

மேலும் கூறுகையில், இந்த வழக்கு விசாரணையில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் ஒத்துழைக்கவில்லை; சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவரான அவர், வழக்கின் ஆவணங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை. ஒப்படைத்த ஆவணங்களில் சில திருத்தப்பட்டுள்ளன. ரோஸ்வேலி வழக்கில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது என கூறினர்.

இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் இல்லத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றபோது நடந்த சம்பவத்தை அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் விவரித்தார்.

அப்போது அவர், 25 சி.பி.ஐ. அதிகாரிகள் ஒரு பஸ்சுக்குள் தூக்கி போடப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் விகாஸ் ஸ்ரீவஸ்தவ் வீட்டை மேற்கு வங்காள மாநில போலீசார் முற்றுகையிட்டுள்ளனர். அவரது வீட்டுக்கதவை அவர்கள் தட்டியபோது, அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். மேற்கு வங்காள மாநில அரசின் செயல்பாடுகள், அங்கு அரசியல் சாசன எந்திரம் செயலற்றுப்போய் விட்டதையே காட்டுகிறது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால், அது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என குறிப்பிட்டார்.

மேற்கு வங்காள மாநில போலீஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, சி.பி.ஐ. தரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்து எதிர்வாதம் செய்தார். அவர், கொல்கத்தா போலீஸ் கமிஷனரை துன்புறுத்தவும், அவமானப் படுத்தவும்தான் முயற்சி நடந்துள்ளது. மேற்கு வங்காள மாநில போலீஸ் சிறப்பு புலனாய்வு குழுவின் பங்களிப்பு பற்றி சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பாராட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு தொடர்பு இருப்பதால்தான் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது என்று குறிப்பிட்டார்.

கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மீது வழக்கு போடப்படவில்லை. சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான எந்தவொரு வழக்கிலும் அவர் பெயர் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெறவில்லை. அவருக்கு 3 முறை நோட்டீஸ் அளிக்கப்பட்டபோது, கொல்கத்தா ஐகோர்ட்டு தலையீட்டால்தான் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் சி.பி.ஐ. விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள்:-

* மேகாலயாவில் ஷில்லாங் நகரில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும். சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நம்பத்தகுந்த விதத்தில் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

* ராஜீவ் குமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்யக் கூடாது. அவர் மீது கடுமையான பிற நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

* சாட்சியங்களை குலைக்க முயற்சித்தார் என்ற சி.பி.ஐ. தரப்பு புகார் பற்றி ராஜீவ் குமார் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

* சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அவமதிப்பு வழக்கு பற்றி 18-ந்தேதியோ, அதற்கு முன்பாகவோ பதில் மனு தாக்கல் செய்வதற்கு மேற்கு வங்காள மாநில அரசு தலைமைச்செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

* அவர்கள் 3 பேரும் 20-ந்தேதி கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராக வேண்டுமா என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டின் தலைமைச்செயலாளர் 19-ந்தேதி தெரிவிப்பார்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மனுக்கள் மீதான அடுத்த கட்ட விசாரணை 20-ந்தேதி நடைபெறும்.