பெங்களூரு,
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தான் காரணம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா புகார் கூறி இருந்தார்.
இது தொடர்பாக பேட்டி அளித்த முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறும்போது, "14 மாதங்கள் முதலமைச்சராக இருந்தேன், அப்போது காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டேன்.
காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. எனது முகத்தில் தாள்களை வீசி எறிந்தார். எவ்வளவு நாள் தான் அடிமையாக இருப்பதை விரும்ப முடியும். காங்கிரஸ் கட்சி என்னை கிளார்க் போல் நடத்தியது. அரசை நடத்தியது சித்தராமையா தான். இந்த அரசியலால் வெறுப்படைந்து விட்டேன்.
பாஜகவைக் காட்டிலும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை, பெரிய எதிரி போல் காங்கிரஸ் கருதியது. என்னை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு சித்தராமையா முயற்சி மேற்கொண்டார்" என்று கூறினார். இதுதொடர்பாக நேரடி விவாதத்திற்கு தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.