புதுடெல்லி,
லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து படைகளை திரும்ப பெறுவதை விரைவுபடுத்த இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, இந்திய ராணுவ தளபதி நரவானே 2 நாள் பயணமாக லடாக் பகுதிக்கு சென்று எல்லை நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ததோடு, ராணுவ உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேசினார். மோதலில் காயம் அடைந்த லே பகுதியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், 2-ம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்திய 75-வது ஆண்டு வெற்றி விழாவையொட்டி நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக மாஸ்கோ சென்றிருந்த ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தனது 3 நாள் ரஷிய பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து டெல்லி திரும்பினார். அவரை நேற்று ராணுவ தளபதி நரவானே சந்தித்து பேசினார். அப்போது, எல்லையில் உள்ள சூழ்நிலை, இந்திய படைகளின் தயார் நிலை போன்றவை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் அவர் விளக்கி கூறியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.