தேசிய செய்திகள்

ஏணி வேலை செய்யவில்லை, வலை இல்லை... 9 பேரை பலி கொண்ட டெல்லி தீ விபத்து திட்டமிட்ட சதியா? ஆம் ஆத்மி திடுக்கிடும் குற்றச்சாட்டு

ஆம் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜேந்திர கஷ்யப்பின் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் தீ விபத்தில் பலியாகி உள்ளனர்.

புதுடெல்லி

டெல்லியின் தென்மேற்கே பாலம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ராம் சவுக் மார்க்கெட் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நேற்று காலை 7.05 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்து 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்று சேர்ந்தன. போலீஸ், விமான படை போலீஸ், தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த குழுவினரும் உடனடியாக சென்று சேர்ந்தனர். அவர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது.

எனினும், தீ மளமளவென பரவியதில், 3 சிறுமிகள் உள்பட ஒரே குடும்பத்தின் 9 பேர் பலியானார்கள். தவிர சிறுமி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சப்தர்ஜங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்தினரை, முன்னாள் முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவருடன் அக்கட்சிக்கான டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ், முன்னாள் மந்திரி அதிஷி உள்ளிட்டோரும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இதேபோன்று, தீ விபத்து சம்பவம் நடந்த பாலம் பகுதிக்கும் கெஜ்ரிவால் நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அவர் கூறும்போது, இது விபத்தல்ல. கொலை. நாட்டின் தலைநகர் டெல்லியில், தீயணைப்பு துறையினரின் ஏணி திறக்கவில்லை என கூறுகிறார்கள்.

அவர்களிடம் வலை கூட இல்லையா? இதெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது? என கேட்டார். பிரதமர், உள்துறை மந்திரி, அனைத்து பெரிய தலைவர்களும் எங்கே வசிக்கிறார்கள்? ஆம் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜேந்திர கஷ்யப்பின் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் தீ விபத்தில் பலியாகி உள்ளனர்.

அவர்கள் தொடர்ந்து அலறி கொண்டே இருந்தனர். சத்தம் போட்டபடி இருந்தனர். ஒரு மணிநேரத்திற்கு பின்னர் தீயணைப்பு வாகனம் வந்துள்ளது. அப்போது கூட அவர்களால் ஏணியை திறக்க முடியவில்லை. அவர்களிடம் ஒரு வலை கூட இல்லை. மக்களின் கண் முன்னே 9 பேர் தீயில் கருகி பலியாகி உள்ளனர்.

ராஜேந்திரா ஆம் ஆத்மி கட்சியின் அர்ப்பணிப்பான தோழர். கோவாவில் கட்சி பணிகளை கவனித்து வந்தவர். இந்த பாதிப்பில் இருந்து அவராள் மீள முடியவில்லை. இதற்கு இழப்பீடே கிடையாது. இந்த துயரத்தில் இருந்து வெளியே வர அவருக்கு கடவுள் வலிமையை தரட்டும் என்று கூறினார். ஆம் ஆத்மி டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ் கூட இதே குற்றச்சாட்டை கூறினார்.