லக்னோ,
இன்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லகிம்பூர் வன்முறை சம்பவம் காரணமாக மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் லகிம்பூர் வன்முறையால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அதன் தொடர்ச்சியாக இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். நேற்று நான் சந்தித்து ஆறுதல் கூறிய பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்தும் நீதி வேண்டும் என்று முறையிட்டு உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்களை தடுத்து நிறுத்துவதற்காக தான் காவல்துறை பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர குற்றவாளிகளை கைது செய்வதற்காக பயன்படுத்தப்படவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவத்தை நேரில் பார்த்த அனைவரும் மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் அங்கு நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். இதனால், விசாரணை நேர்மையாக நடைபெற மந்திரி தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக உத்தரபிரதேசத்தில் அமைதியை சீர்குலைத்ததாக பிரியங்கா காந்தி உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு, அங்கு நடந்த சம்பவம் குறித்து விவரித்துள்ளது. அதில் மத்திய இணை மந்திரியின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா டேனி விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த இடத்துக்கு 3 வாகனங்களில் வந்தார். அந்த கூட்டமைப்பின் தலைவர் டஜிந்தர் சிங் வீர்க் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் மீது காரையும் ஏற்ற முயன்றுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
இதனை மறுத்துள்ள மந்திரி, சில சமூக துரோகிகள் விவசாயிகள் போராட்டத்தில் நுழைந்து, கூட்டத்தின் மீது கல் வீச்சு நடத்தியுள்ளனர். கார் மீது கற்களை வீசியதால் இந்த விபத்து நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.