ஸ்ரீநகர்,
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் காய்ந்து போன புதர்களில் இருந்து நேற்று முன்தினம் மாலை முதல் காட்டுத்தீ எரியத்தொடங்கியது. இது எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு பரவியது. இதில் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடித்து சிதறின. தீயை அணைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் இதைப் பயன்படுத்தி பாகிஸ்தான் எந்தவொரு வன்செயலிலும் ஈடுபட்டால் அதை முறியடிப்பதற்காக எல்லையில் தீவிர கண்காணிப்பிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். காட்டுத்தீயில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிறுவப்பட்டிருந்த பாதுகாப்பு உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.