புதுடெல்லி,
இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என மத்திய ஆளுங்கட்சியான பா.ஜனதா கூறிவந்தது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி சட்ட ஆணையம் ஆய்வு செய்துவருகிறது. இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பு அனைத்து கட்சிகளின் கருத்தையும் கேட்க முடிவு செய்தது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது, ஆலோசனையையும் மேற்கொண்டது.
இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற மாநில சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் பொதுமக்களின் பணம் மிச்சமாகும், பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக நிர்வாகத்தின் மீதான சுமை குறையும். இதன்மூலம் அரசாங்கம் கொள்கைகளை சிறப்பாக செயல்படுத்த முடியும் என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசியல் சாசனப் பிரிவு 172-ஐ திருத்தம் செய்யாமல் இது சாத்தியம் கிடையாது எனவும் கூறியுள்ளது.
இவ்விவகாரத்தில் மாநில அரசின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.