தேசிய செய்திகள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்க சட்டம் கொண்டுவரப்படுமா? - கேரள சட்டசபையில் பினராயி விஜயன் விளக்கம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி மறுப்பதற்காக சட்டம் கொண்டுவரப்படுமா என்பது குறித்து கேரள சட்டசபையில் பினராயி விஜயன் விளக்கம் அளித்தார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த கட்டுப்பாட்டை ரத்து செய்தது. அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு முடிவு செய்தது. இதனால், கடந்த ஆண்டு அய்யப்பன் கோவிலுக்கு சில பெண்கள் வந்தபோது, போராட்டங்களும், மோதலும் வெடித்தன.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீது கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, அதற்கு முன்பு, இந்த மறுஆய்வு மனுக்கள் மீது தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, சபரிமலை அய்யப்பன் கோவிலில், வருகிற 16-ந் தேதி நடை திறக்கப்படுகிறது. அனைத்து வயது பெண்களையும் அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயலிழக்கச் செய்வதற்காக, சட்டம் கொண்டுவரப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேற்று கேரள சட்டசபையில் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி மறுப்பதற்காக, சட்டம் கொண்டுவர வாய்ப்பில்லை. அப்படித்தான், மாநில அரசுக்கு சட்ட ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, சட்டம் கொண்டு வருவது பற்றி பேசுபவர்கள், பக்தர்களை ஏமாற்றுகிறார்கள் என்று அர்த்தம்.

மேலும், இந்த தீர்ப்பு ஜல்லிக்கட்டு தீர்ப்பு போன்றது அல்ல. இது, அடிப்படை உரிமைகள் தொடர்பானது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மாநில அரசு அமல்படுத்தியாக வேண்டும்.

குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி மறுப்பது, அவர்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். அரசியல் சட்டத்துக்கும் அது விரோதமானது.

சபரிமலைக்கு வருமாறு எந்த பெண்ணையும் கேரள அரசு கட்டாயப்படுத்தவில்லை. அய்யப்பன் கோவிலுக்கு வருவதும், வராமல் இருப்பதும் அவர்களது விருப்பம். மறுஆய்வு மனு மீதான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்காக மாநில அரசு காத்திருக்கிறது. இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு