தேசிய செய்திகள்

திரிபுராவில் லெனின் சிலை அகற்றம்: இதனை சகித்துக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி

திரிபுராவில் லெனில் சிலை அகற்றப்பட்டதற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து உள்ளார். #LeninStatue

கொல்கத்தா,

திரிபுராவில் பா.ஜனதா ஆட்சிக்குவந்த பின்னர் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது பதட்டத்தை அதிகரித்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. லெனின் சிலை அகற்றப்பட்டதை பா.ஜனதா தலைவர்கள் பலர் நியாயப்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே எதிர்க்கட்சியினர் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பாங்குராவில் பொதுகூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, லெனின் சிலையை உடைத்ததை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நம்முடைய அரசியல் எதிர்க்கட்சியினர். லெனின் என்னுடைய தலைவர் கிடையாது. ஆனால் மார்க்ஸ் மற்றும் லெனின் சிலைகளை உடைப்பதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது பொருள் கிடையாது, என்றார். திரிபுராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வன்முறை சம்பவங்கள் தலை தூக்கி உள்ள விவகாரம் தொடர்பாக பா.ஜனதா மீது கடுமையான தாக்குதலை மம்தா பானர்ஜி முன்வைத்தார்.

ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனுடைய பொருள் நீங்கள் எதிராளிகளை சித்தரவதை செய்ய வேண்டும், ஆட்சியை கைப்பற்றிய பின்னர் சிலைகளை தகர்க்கவேண்டும் என்பது கிடையாது, என்றார் மம்தா பானர்ஜி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எங்களுடைய தொண்டர்களை சித்தரவதை செய்தது, கொலை செய்தது, ஆனால் நாங்கள் அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுடைய பாதையில் பயணிக்கவில்லை, என்று மம்தா பானர்ஜி பேசினார். மத்தியில் உள்ள ஆணவ அரசை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாகும் என மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.