புதுடெல்லி,
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 3 லட்சத்துக்கு குறைவான கொரோனா நோயாளிகளே சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
ஆட்கொல்லி வைரசான கொரோனாவின் பிடியில் இருந்து இந்தியா மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது. புதிய கொரோனா தொற்றுகள் தினமும் கணிசமாக சரிந்து வருகிறது. இந்தியா மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இது ஒரு மிகப்பெரும் சான்றாக அமைந்துள்ளது.
அதேநேரம் நாட்டின் மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்புகளால், தொற்றுக்கு ஆளானவர்களும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது.
தினமும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருவதால், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் வேகமாக சரிகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் வெறும் 2 லட்சத்து 89 ஆயிரத்து 240 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
இது முந்தைய தினத்தை விட 3,278 பேர் குறைவாகும். ஒட்டுமொத்தமாக 2.86 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். 26 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சையில் இருப்பது சாதகமான அம்சமாக அமைந்திருக்கிறது.
புதிய பாதிப்புகளை விட அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் குணமடைவதே இந்த நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 895 பேர் தொற்றில் இருந்து குணமடைந்திருக்கிறார்கள்.
இதனால் நாடு முழுவதும் இதுவரை குணமடைந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 96 லட்சத்து 63 ஆயிரத்து 382 ஆக உயர்ந்துள்ளது. அதாவது மொத்த பாதிப்பில் 95.69 சதவீதத்தினர் கொரோனாவை வென்று விட்டனர்.
புதிதாக குணமடைந்தவர்களில் 76 சதவீதத்தினர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதுவும் கேரளாவில் அதிகபட்சமாக 5,057 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து மராட்டியம் (4,122 பேர்), மேற்கு வங்காளம் (2,270 பேர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இதற்கிடையே மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 23,950 பேர் கொரோனாவிடம் புதிதாக சிக்கி விட்டனர். நேற்று முன்தினம் 20 ஆயிரத்துக்கு குறைவாக இருந்த புதிய தொற்று நேற்று அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களையும் சேர்த்து இந்தியா பெற்றுள்ள கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 கோடியே 99 ஆயிரத்து 66 ஆகி விட்டது. இதன் மூலம் பாதிப்பில் உலக அளவில் 2-வது இடத்தில் இந்தியா நீடித்து வருகிறது.
புதிய பாதிப்புகளிலும் 77 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள்தான். இதிலும் அதிகபட்சமாக கேரளாவில் 6,049 பேர் ஒரே நாளில் தொற்றில் சிக்கியுள்ளனர். அடுத்ததாக மராட்டிய மாநிலம் 3,106 பாதிப்புகளை பெற்றிருக்கிறது.
இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 333 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவியிருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 75 பேரும், மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் முறையே 38 மற்றும் 27 பேரும் பலியாகி இருக்கின்றனர்.
இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பலி 1 லட்சத்து 46 ஆயிரத்து 444 ஆகியிருக்கிறது. இது மொத்த பாதிப்பில் 1.45 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் தனியார் மற்றும் அரசு ஆய்வகங்கள் என 2,276 பரிசோதனைக்கூடங்களில் தற்போது கொரோனா பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இதனால் நாளொன்றுக்கு சராசரியாக 15 லட்சம் பரிசோதனைகள் வரை மேற்கொள்ளும் திறனை நாடு பெற்றிருக்கிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 164 சளி மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தன. இதன் மூலம் 16.42 கோடி பரிசோதனைகளை இந்தியா முடித்து இருக்கிறது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.