புதுடெல்லி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையொட்டி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.ராம்நாத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசை அடுத்த வாரம் அணுகுவோம். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசின் அனுமதியை கேட்போம். எங்கள் நோக்கம், ஆலையை கூடிய விரைவில் செயல்பட வைக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார்.
தொடர்ந்து கூறும்போது, நாங்கள் ஒரு இணக்கமான நிறுவனமாக இருக்கிறோம் என்பதை எப்போதும் சொல்லி வந்திருக்கிறோம். சுற்றுச்சூழல் சட்டத்தை பின்பற்றுவதை உறுதி செய்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த 6 மாதங்களாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்ததால், தாமிர இறக்குமதி அதிகரித்துள்ளது. நாட்டின் கந்தக அமில தேவையில் 80-90 சதவீத தேவையையும், பாஸ்பாரிக் அமில தேவையில் 15 சதவீதத்தை ஸ்டெர்லைட் ஆலைதான் பூர்த்தி செய்தது என்றும் சுட்டிக்காட்டினார்.